யேர்மன் நாட்டில் புகழ்பெற்ற நறுமணநீர் நகர் கேளின் மாநகரில், தமிழ் மொழிக்கான ஒரு திருவிழாவைப் பெருவிழாவாகப் பேரவை விழா – 2025 இனை மே மாதம் 3ம் நாள் நடத்திச் சிறப்பித்துள்ளனர் யேர்மன் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.
மண்டப வாயிலில் மலர்க்கோலம் இடப்பட்டு, மேசை மீது பித்தளையாலான சிலைகள், நிறைகுடம், விளக்குகள் எனப் பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டு, மலர்களும் பழங்களும் அலங்கரிக்கத் தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றி நின்றது அவ்விழா. வாயிலில் வைக்கப்பட்டிருந்த விளக்குகளை இரு சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் இணைந்து ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள்.
மங்கல இசை வரவேற்க அனைவரும் மண்டபத்துக்குள் நுழைந்ததும், டியூறன் தமிழாலய ஆசிரியருமான திருமதி கவிதா மாருதிதாசன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு ஈகைச்சுடரை ஏற்றினர். ஈழத்தில் போர் காரணமாகத் தம்முயிரை இழந்த பொது மக்களுக்கும் மாவீரர்களுக்கும் நாட்டுப் பற்றாளர்களுக்கும் சுடரேற்றி மலர் தூவி அக வணக்கம் செலுத்தப்பட்டது. பேரவை விழா நிகழ்ச்சிகளைச் செல்விகளான ஜனகா நாகராஜா, பிரவிகா ரவீந்திரன் மற்றும் செல்வன் கீர்த்திகன் கிரிதரன் அவர்களோடு திருவாளர் கபிலேஷன் கமலதாசன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
சிறப்புவிருந்தினர்கள் மங்கல விளக்கேற்றி விழாவினை இனிதே தொடக்கிட, கேர்பன் இராஜேஸ் நர்த்தனாலய ஆசிரியர் முதுகலைமாணி திருவாட்டி துஷ்யந்தி ஜெகதீஸ்வரன் அவர்களின் மாணவர்களான செல்விகள் கிஷானா ஆனந்தராசா மற்றும் வர்ஷிகா றாஜ்குமார் அவர்கள் இருவரும் இணைந்து வரவேற்பு நடனம் வழங்கத் திருவாளர் டினோஜன் கலாறஞ்சன் அவர்கள் தமிழ் மொழியிலும் திருவாட்டி மிதுஷா சுதர்சன் அவர்கள் வாழிட மொழியான யேர்மனிய மொழியிலும் வரவேற்புரை வழங்கி அனைவரையும் வருக வருக என வரவேற்றார்கள்.
செல்வி அபிசகா ரவீந்திரன் மற்றும் செல்வன் அறிவகன் ரவீந்திரன் அவர்கள் திருவைம்புராணம் ஓதி இறை வணக்கம் செய்யத் ‘தாய்மொழி தமிழ்’ என்னும் தலைப்பில் செல்வன் அவிஷ் நாகராஜா அவர்கள் யேர்மனிய மொழியில் உரை வழங்கித் தமிழ் வணக்கம் செய்தார். தொடர்ந்து, சைவநெறி கற்ற மாணவர்களுக்கு ‘அறிவு நெறிக்கற்கைச் சான்றிதழ்கள்’ வழங்கப்பட்டது. யேர்மன் தமிழ்க் கல்விக் கழக மத்திய மாநிலச் செயற்பாட்டாளர்களுள் ஒருவரான திருவாட்டி மோகனரஞ்சினி புண்ணியமூர்த்தி, திருவாட்டி துஷ்யந்தி ஜெகதீஸ்வரன், திருவாளர் சின்னையா நாகேஸ்வரன் (ரஞ்சன்) ஆகியோர் இச்சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கிப் பாராட்டினார்கள்.
அடுத்து, தமிழினத் தலைவன் மேதகு அவர்களைப் புகழ்த்து ‘’ராஜகோபுரம் எங்கள் தலைவன், பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்’’ என்ற பாடலைப் பாட வருகின்றார் செல்வன் யகிலன் ஜெகதீஸ்வரன் அவர்கள் பாடியதும், ‘தமிழ் ஈழம்’ என்ற தலைப்பில் யேர்மன் மொழியில் உரை ஒன்றை வழங்கினார் செல்வன் கீர்த்திகன் கிரிதரன் அவர்கள்.
நிகழ்ச்சி சோர்வின்றி வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்ததோர் பண்பாட்டுப் பேரவையை வாழ்த்தும் வண்ணம் வாழ்த்துரைகளை வழங்கி மகிழ்ந்தார்கள். இவ்விருவரின் வாழ்த்துரைகளைத் தொடர்ந்து, இணையம் வழியே திருமந்திரம் கற்றுக்கொண்ட மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இச்சான்றிதழ்களை பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைச் செயகலப் பொறுப்பாளர் திருவாளர் பார்த்தீபன் பாஸ்கரலிங்கம், திருவாட்டி பரிமளகாந்தி பரமதாஸ், சைவப்புலவர் திருவாளர் சின்னத்தம்பி தங்கரத்தினராசா அவர்களும் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்கள்.
தொடர்ந்து சைவப்புலவர் திருவாளர் சின்னத்தம்பி தங்கரத்தினராசா அவர்கள் திருமந்திரம் சார்ந்து சிறப்புரை வழங்க, முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த தமிழீழப் பாடல் ஒன்றைப் பாடி மகிழ்வித்தார் செல்வி வினுசா ஜெகதீஸ்வரன் அவர்கள். இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த சான்றோர்களுக்குப் பொன்னாடை போர்த்தித் தமிழ்த் தாய் உருவப்படம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
பேரவை விழா 2025இன் உச்சகட்டமாகத் தமிழியல் இளங்கலைப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முதன் முறையாக யேர்மன் நாட்டில் இளங்கலைத் தமிழியல் பட்டம் பெற்ற இரண்டு மாணவர்களுக்குப் பட்டமளிக்கப்பட்டது.
மண்டபத்தில் தமிழ்மொழிப் பாடல் இசைக்க, முனைவர் திருவாளர் மைத்திரேயன் குப்புசாமியும் விரைவுரையாளர் திருவாளர் பார்த்திபன் பாஸ்கரலிங்கமும் விரிவுரையாளர் திருவாட்டி ஸ்ரீப்பிரியா இராசையா அவர்களும் இரு பட்டகர்களை மண்டபத்துக்குள் அழைத்துவந்தார்கள். செல்வி பார்த்திமா ஹிமாசா உபைதுல்லா அவர்களும் விரிவுரையாளர் திருவாட்டி ஸ்ரீப்பிரியா இராசையா அவர்களும் பட்டமளிப்பு விழாவைத் தொகுத்து வழங்கினார்கள். மேடையில், குறுங்காணொளிகளின் வழியே ஒவ்வொரு பட்டகர்களின் கல்வித்தகமைகளும் பணிகளும் எடுத்து வியம்பப்பட முனைவர் திருவாளர் மைத்திரேயன் குப்புசாமி அவர்கள் பட்டகர்களுக்குப் பட்டம் வழங்கினார். மூவரும் சிறப்புரை ஆற்றியதும், செல்வி வினுசா ஜெகதீஸ்வரன் அவர்கள் திருப்புகழ் பாடி இறை வணக்கம் செய்தார்.
தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் பேரவை விழாச் சிறப்புமலர்களை (நூல்களை) திருவாட்டி திலகவதி தில்லையம்பலம் அவர்கள் கைகளில் சுமந்து வர, திருவாளர் செல்லத்துரை தில்லையம்பலம் அவர்கள் அம் மலர்களுக்குக் குடை பிடிக்க, இரு மாணவர்கள் சாமரம் வீச, கைகளில் குத்துவிளக்குச் சுடர்களுடன் மாணவிகள் புடை சூழ, மங்கல இசை முழங்க, சிறப்புமலர்கள் மேடைக்கு எடுத்து வரப்பட்டன.
எங்கும் காணமுடியாத நிகழ்வாக இம்மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இறைவனுக்கு நிகராகத் தமிழ் அன்னையின் மலர்களைப் பணிவோடு கொண்டுவரப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. முதல் சிறப்புமலரினைச் சிவன் பிட்சா உரிமையாளர் திருவாட்டி மிதுஷா சுதர்சன் அவர்கள் பெற்றுக்கொள்ள, மலர் வெளியீட்டு உரையை வழங்கினார் திருவாட்டி பரிமளகாந்தி பரமதாஸ் அவர்கள்.
இறுதியில் தமிழ் மொழியிலும் வாழிட மொழியிலும் நன்றியுரை கூறப்பட நிகழ்வு இனிதே நிறைவுற நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் தமிழ் உணவு விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வை அமைதியாகவும் அழகாகவும் சீராகவும் ஒழுபடுத்தி நடத்தியிருந்தார்கள் திருவாளர் டினோஜன் கலாறஞ்சன் மற்றும் திருவாளர் கபிலேஷன் கமலதாசன் அவர்கள்.
அனைத்துச் செயற்பாடுகளிலும் இளையோருக்கு வழி விட வேண்டும் எனப் பல தமிழ் அமைப்புகள் மேடைகளில் முழங்கினாலும் யாரும் இளையோரின் கையில் பொறுப்புகளைக் கொடுக்க முன் வருவதில்லை. ஆனால் இன்று இந்த விழாவை திருவாளர் டினோஜன் கலாறஞ்சன் மற்றும் திருவாளர் கபிலேஷன் கமலதாசன் அவர்கள் என்னும் இரு இளைஞர்கள் கையில் ஒப்படைத்து விட்டு அவர்களின் முதுகெலும்பாகவும் பக்கபலமாகவும் சைவப்புலவர் திருவாளர் சின்னத்தம்பி தங்கரத்தினராசா அவர்களும் அவரது துணைவியார் திருவாட்டி கலாஸ்ரீ தங்கரத்தினராசா அவர்களும் நின்று செயல்படுத்தி விழாவை இனிதே நடத்தி முடித்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாது தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் அனைத்து மாணவர்கள் இந்நிகழ்வில் பங்களிக்கச் செய்ததோடு தமிழ்மொழியிலும் வாழிடமொழியிலும் நிகழ்ச்சிகளை மாணவர்களே தொகுத்து வழங்கச் செய்திருந்தார்கள். இதில் சிறப்பென்னவென்றால், ஒரு முறை தமிழ் மொழியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மாணவர் மறுமுறை வாழிடமொழியில் தொகுத்து வழங்கித் தமது இரு மொழிப் புலமையைச் சபையோருக்கு உணர்த்தியது தான். இந்த மாதிரியான முறையை முதன்முதல் இந்நிகழ்வில் தான் பார்க்க கூடியதாக இருந்தது .
அருமையான நிகழ்வை நடத்திய யேர்மன் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை உறுப்பினர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கேளின் தமிழாலய உறவுகளுக்கும் எமது பாராட்டுகள்.