சனிக்கிழமையன்று இரவில் சென்னையின் மணலியிலும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளிலும் திடீரென பெரும் மழைபெய்திருக்கிறது. மணலியில் பெய்த மழைக்கு மேகவெடிப்பே காரணம் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. என்ன நடந்தது?
சனிக்கிழமையன்று இரவில் சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென மழை கொட்டித் தீர்த்தது. மணலி போன்ற பகுதிகளில் மேகவெடிப்பு நடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தென் மேற்குப் பருவமழை இந்தியா முழுவதும் தற்போது தீவிரமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவமழை காலகட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யாது என்றாலும் வெப்பச் சலனத்தால் ஆங்காங்கே மழை பெய்வது வழக்கம். அதைப் போலவே சில நாட்களுக்கு ஒரு முறை மழை பெய்துவந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) இரவு சென்னை முழுவதும் இடியுடன் கூடிய மழை பரவலாகப் பெய்தது. குறிப்பாக சென்னையின் வடபகுதியில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. அன்று இரவு 11 முதல் 12 மணிவரை பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அன்று இரவில் மூன்று இடங்களில் அதிதீவிர கன மழையும் எட்டு இடங்களில் தீவிர கனமழையும் 28 இடங்களில் கனமழையும் பதிவானது.
மணலி, மணலி புதுநகர், விம்கோ நகர் ஆகிய இடங்களில் அதிதீவிர கனமழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் மணலியில் 27.15 செ.மீ. மழையும் மணலி புதுநகரில் 25.56 செ.மீ மழையும் விம்கோ நகரில் 22.86 செ.மீ. மழையும் பதிவானது.