ரஷ்யாவிடமிருந்து இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றன. இதன்மூலம், உக்ரைன் போரை ரஷ்யா மூன்று ஆண்டுகளாகச் சமாளித்து வருகிறது. இது, அமெரிக்காவிற்குப் பிடிக்காததால் அந்த நாடு ரஷ்யாவை மறைமுகமாக எச்சரித்து வருகிறது. தவிர, ரஷ்யாவின் ஏற்றுமதிகளைப் பெறுபவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது, ரஷ்ய ஏற்றுமதிகளைப் பெறும் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது 100% இரண்டாம் நிலை வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ஆயினும், தற்காலிகமாக 50 நாட்கள் கெடு விதித்துள்ளார். இதற்கிடையே, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, ”பிரேசில், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால், இரண்டாம் நிலை வரிவிதிப்புகளால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும். அதேநேரத்தில், உக்ரைனில் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என சீனா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைக் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு உதவியதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் தண்டிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 100 சதவீத வரியை விதிப்பார் என்று அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார்.


“புடின், தனக்குச் சொந்தமில்லாத நாடுகளை ஆக்கிரமிப்பதன்மூலம் முன்னாள் சோவியத் யூனியனை மீண்டும் உருவாக்க முயற்சிக்கிறார். மேலும் உங்கள் பொருளாதாரம் நசுக்கப்பட இருக்கிறது. நாங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குகிறோம், எனவே புடினை எதிர்த்துப் போராட உக்ரைன் ஆயுதங்களைக் கொண்டிருக்கும்” என் எச்சரித்துள்ளார்.