நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், உலக நாடுகள் உற்றுநோக்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான வரலாற்றுச் சந்திப்பு அலாஸ்காவில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெற்றது. உலகளவில் பெருத்த எதிர்பார்ப்பை இந்தச் சந்திப்பு நிகழ்த்தியபோதும் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் முடிவு தொடர்பாக எதுவும் எட்டப்படவில்லை.

எனினும், ட்ரம்பிடம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையினபோது புதின் சில முக்கியமான கோரிக்கையை வைத்ததாகக் கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் தொழில் வளம் நிறைந்த பகுதியான டொனெட்ஸ்க்கை உக்ரைன் விட்டுக்கொடுத்தால், போரை நிறுத்த தயார் என்று புதின் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. அதற்குப் பதில் புதின் வேறொரு சிறிய பகுதியைத் தருவதாகச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.