பிரான்சு மண்ணிலே தமிழ்மொழி தழைத்தோங்க உழைக்கும் அனைவரதும் ஒருமித்த பங்களிப்புடன் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2025. பிரான்சின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 66 தமிழ்ச்சோலைகளில் பயில்வோர், மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் பயில்வோர்களுடன் தனித்தேர்வர்களுமாக 5718 மாணவர்கள் இத்தேர்வில் தோற்றியிருந்தனர்.
மாணவர்களின் புலன்மொழியாற்றலை மேம்படுத்தும் நோக்கோடு கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுத்தாற்றலை மதிப்பிடும் எழுத்துத்தேர்வு என வளர்தமிழ் 1 தொடக்கம் 12 வரையான வகுப்புகளுக்கான மதிப்பீட்டுத்தாள்களைத் தயாரித்தளித்த தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவுடன் சிறப்படைந்துள்ளது இத்தேர்வு.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் 23வது தடவையாகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வினை நடாத்தி முடித்துள்ளது. அனைவரதும் ஒருமித்த ஒத்துழைப்பால் ஒவ்வோராண்டிலும் இத்தேர்வு மென்மேலும் சிறப்படைந்து வருகின்றது. இதற்குக் காரணமாய் திகழும் அனைவருக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நன்றி நவில்வதாக தெரிவித்துள்ளது .