மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

கல்விச் செயல்பாடுகள் குறித்த கொள்கை முடிவுகள் தான்தோன்றித் தனமாய் அறிவிப்பது சரியாக இருக்காது-ஏர் மகாராசன்

கல்விச் செயல்பாடுகள் குறித்த கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக, ஆசிரியர்களிடமோ அல்லது கல்வியாளர்களிடமோ கருத்தேதும் கேட்காமல் தான்தோன்றித் தனமாய் அறிவிப்பது சரியாக இருக்காது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
*
வகுப்பறைகளில் ப வடிவில் மாணவர்களை அமர வைப்பது என்னும் முடிவு குறித்து ஆதரித்தும் எதிர்த்தும் பதிவுகள் நிறைய.
கடைசி வரிசையில் அமர்கிறவர்கள் எல்லாம் கல்வியில் பின்தங்கியவர்கள் என்று பொருளாகாது என்கிறார் ஷோபனா. இருக்கலாம். ஆனால், last benchers என்பது உலகளாவிய விஷயம். மாணவர்களை ஆசிரியரே கடைசி பெஞ்சுக்குத் தள்ளாவிட்டாலும், சில மாணவர்கள் தாமாகவே கடைசி பெஞ்சைத் தேர்வு செய்வார்கள். எந்நேரமும் ஆசிரியரின் பார்வையில் இருக்கத் தேவையில்லை, டெஸ்குக்குள் மறைத்து வைத்து கதைப்புத்தகம் படிக்கலாம், (இன்றைய பொருளில் சொன்னால் செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டா பார்க்கலாம்,), படம் வரைந்து கொண்டிருக்கலாம், காதல் கடிதம் எழுதலாம், காகிதத்தில் ஏரோபிளான் செய்யலாம், டிபன் பாக்சைத் திறந்து திங்கலாம், ஆசிரியரின் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழிப்பதிலிருந்து தப்பிக்கலாம் இப்படி பல காரணங்களுக்காகத் தேர்வு செய்வார்கள். கடைசி பெஞ்ச்காரர்களை இவன்லாம் தேற மாட்டான் என்று ஆசிரியர்களே கைகழுவி விடுவதும் நடப்பதுதான். ஆக, கடைசி பெஞ்ச்காரர்களாக இருப்பவர்களையும் inclusivityக்குள் கொண்டுவருவது என்ற வகையில் வகுப்பறை அமைப்பில் மாற்றம் குறித்து சிந்திப்பது நல்லதுதான்.
ஆனால், கேரளாவில் செய்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்ததும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையில் தடாலடியாகத்தான் தமிழ்நாட்டிலும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதே என்னுடைய பார்வை. இதில் மறைந்திருக்கும் நடைமுறை சிக்கல்கள் குறித்து சிந்தித்து முடிவு செய்ததாகத் தெரியவில்லை.
முதலாவதாக, இந்த மாற்றம் தொடக்கப்பள்ளிகளில் தேவையில்லை அல்லது பொருந்தாது. ஏனென்றால், தொடக்கப்பள்ளிகளின் 1-2-3 வகுப்புகளில் ஆசிரியர்கள் பெரும்பாலும் மாணவர்கள் மத்தியில்தான் இருப்பார்கள். 4-5 வகுப்புகளில் ஆசிரியர் தனக்குரிய மேடையில் / மேஜை அருகில் இருக்கக்கூடும்.
இரண்டாவதாக, உயர்நிலைப் பள்ளிகளில் சீராக இந்த நடைமுறையை செயல்படுத்த முடியாது. காரணம்?
முதன்மையான காரணம் : ஆசிரியருக்கு நேர் எதிரில் கடைசியாக இருக்கும் மாணவர்கள் மட்டுமே அவரை நேருக்கு நேராகப் பார்க்க முடியும். இடது-வலது பக்க வரிசைகளில் இருக்கும் மாணவர்கள் எல்லாருமே தலையைத் திருப்பித்தான் அவரைப் பார்க்க முடியும். நீங்கள் வழக்கமாக உட்காரும் இடத்திலிருந்து சற்றுத் தள்ளி அமர்ந்து, தலையை இடதுபுறமாகவோ வலதுபுறமாகவோ 30-40 டிகிரி திருப்பி டிவி பாருங்கள். பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் கழுத்து வலி நிச்சயம். அப்புறம் நீங்களே திரும்பி உட்கார்ந்து விடுவீர்கள். வகுப்பறையில் மணிக்கணக்காக அப்படி பார்ப்பது மாணவர்களுக்கு கழுத்து வலிதான் தரும். ஆசிரியர் கரும்பலகையில் எழுதும்போது எல்லா மாணவர்களின் பார்வைக்கும் தெரியாது. ஒவ்வொருவரும் தலையை முன் நீட்டி, பின்னால் வளைந்துதான் பார்க்க முடியும். அது அவர்களுடைய கவனத்தை திசை திருப்பி பாடத்தைக் கற்க முடியாமல்செய்யும்.
அரை வட்ட வடிவில் மாணவர்களை அமர்த்துவது ப வடிவைவிட சற்றே மேம்பட்டது. ஆனால் அதிலும் சிக்கல்கள் உள்ளன. என்னவென்றால்…
1. ஒரு வகுப்பில் அதிகபட்சம் 40 மாணவர்கள்தான் இருக்கலாம். ஆனால் உண்மையில் சில பள்ளிகளில் 45-50 மாணவர்கள்கூட உண்டு. அத்தனை பேரையும் ஒரே வரிசையில் அரைவட்டமாக அமர்த்த முடியாது. அப்போதும் பின்வரிசை உருவாகும்.
2. சராசரியாக ஒரு மாணவருக்கு 10 சதுர அடி பரப்பு இருக்க வேண்டும். 40 மாணவர்கள் என்றால் 400. அதைத்தவிர, ஆசிரியர் அமரும் நாற்காலி, மேசை, அதன் இடதுவலது பகுதிகள், நாற்காலின் பின்புறம் கரும்பலகையின் பக்கம் நின்று எழுதுவதற்கான இடைவெளி என சுமார் 200 சதுர அடிதேவைப்படும்.ஆக மொத்தத்தில் ஒவ்வொரு வகுப்பறையும் சுமார் 600 சதுர அடி இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வளவு இல்லை.
3. பல பள்ளிகளில் வகுப்பறைகளின் அளவு 300-400 சதுர அடிதான் உள்ளது. எனவே வகுப்பறைகளில் மாணவர் எண்ணிக்கை 15க்குள்தான் இருக்க வேண்டும் என்று 2020இல் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது. (2021இல் ஆட்சி மாறி விட்டது.)
4. மாணவர்கள் நலனுக்காக ஒரு நடவடிக்கையை அரசு எடுக்கிறது என்றால் அது அரசுப் பள்ளிகளுக்காக மட்டுமே இருக்கக்கூடாது. அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கும் பொருந்த வேண்டும். பல தனியார் பள்ளிகளில் ஆட்டுமந்தையைப்போலத்தான் அடைத்து வைத்திருப்பார்கள். அங்கே இதை செயல்படுத்துவது கடினம்.
5. சில பள்ளிகளில் இரண்டிரண்டு பேர் அமரும் டெஸ்குகள் இருக்கும். சில பள்ளிகளில் மும்மூன்று பேர் அமரும் டெஸ்குகள் இருக்கும். ப வடிவில் அல்லது அரைவட்ட வடிவில் அமைக்கும்போது, மேலே சொன்னதுபோல எல்லாருமே ஒரே வரிசையில் – முன் வரிசையிலேயே இருப்பது சாத்தியமே இல்லை.
6. அப்படியிருக்கையில், கடைசி வரிசை கூடாது என்பதற்கான இந்த மாற்றம், கடைசி வரிசைக்குப் பதிலாக பின் வரிசையாகத்தான் மாறும்.
7. சில பள்ளிகளில் வகுப்பறை சதுரமாக இருக்கும். சில வகுப்பறைகள் அகலம் அதிகமாக, நீளம் குறைவாக /அகலம் குறைவாக நீளம் அதிகமாக இருக்கும்.
ஆகவே,
எல்லாப் பள்ளிகளுக்கும் சீராக ஒரே நடைமுறை என்பது சாத்தியமில்லை. அந்தப் பள்ளிகளில் வகுப்பறைகளின் அளவு, ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவர் எண்ணிக்கை, வகுப்பறையின் பரிமாணம், டெஸ்குகளின் அமைப்பு இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, அவரவர் வகுப்பறையின் அமைப்புக்கேற்றபடி மாற்றிக் கொள்ளுங்கள், கூடிய வரையில் கடைசிவரிசை என்பது இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
பதிவை எழுதுவதற்கு முன்பு,பல்வேறு நாடுகளிலும் உள்ள வகுப்பறை அமைப்பைத் தேடிப்பார்த்தேன். ஓரிரண்டைத் தவிர பெரும்பாலான நாடுகளில் இப்போது வழக்கில் உள்ளதுபோல வரிசையாகத்தான் அமர வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஒரு விஷயம் – வகுப்பறை பெரிது, மாணவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு.
ப வடிவா, அரைவட்ட வடிவா என்பதைப் பற்றி மட்டுமே பேசவைத்து விட்டார்கள். உண்மையில் பேச வேண்டியது இதுதான் –
— ஒவ்வொரு வகுப்பறையிலும் அதிகபட்சம் எத்தனை மாணவர்கள் இருக்க வேண்டும்?
— எத்தனை மாணவர்களுக்கு எத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும்?
— வகுப்பறைகள் போதுமான அளவுக்கு இருக்கின்றனவா?
— மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்களா?
— ஆசிரியர்கள் விடுப்பில் செல்லும்போது மாற்று ஆசிரியர்களுக்கு ஏற்பாடு இருக்கிறதா?
இதைத்தான் முதலில் பேச வேண்டும்.
இதைத்தான் முதலில் பேச வேண்டும்.
பி.கு. – பதிவிட்டு முடித்த அடுத்த நிமிடம் இந்தப் படம் கண்ணில் பட்டது. 🙂 மூன்றாவது பத்தியில் சொன்னது சரிதான் என்றாகிறது. இதுவும் U-turn சர்க்காராக இருக்கிறது என்பதற்கு மற்றொரு உதாரணம் இது.
அது இருக்கட்டும். பதிவின் கடைசிப் பகுதியில் உள்ள விஷயங்கள் குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள்
திரு ஷாஜகான் அவர்களது பதிவிலிருந்து ….

விளம்பரங்கள்

வாழ்த்துமாலை

மரண அறிவித்தல்

Test Name of the Person

Test Place

Test Date